ஒரு பெண்ணுடன் 2 வாலிபர்கள் பழகியதால் மோதல்: போதை ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் கொலை
- தனது காதலியை சூர்யா அபகரிக்க முயல்வதாக கருதினார்.
- சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டு அவரிடம் நைசாக பேசி கோவைக்கு வரவழைத்தனர்.
கோவை:
கோவை வெள்ளலூரில் புதிதாக பஸ்நிலையம் கட்டப்பட்டு அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த இடம் லாரிகள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.
இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி அந்த பஸ் நிலைய கட்டிடத்துக்குள் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் காயங்கள் காணப்பட்டன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
போத்தனூர் போலீசார் வாலிபர் உடலை மீட்டு அவர் யார், அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். வாலிபரின் மார்பில் அபர்ணா எனவும், லவ் சிம்பளும் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த விவரங்களை கொண்டு போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 21) என்பது தெரியவந்தது. இவரும், அவனியாபுரத்தைச் சேர்ந்த மற்றொரு வாலிபரான கார்த்திக் (21) என்பவரும் ஒரே பெண்ணுடன் பழகி வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில் சூர்யாவை கோவைக்கு வரவழைத்து கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட சூர்யாவும், கார்த்திக்கும் கல்லூரி மாணவர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் முதலில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். சூர்யாவுக்கு சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்ததால் அவர் அங்கு படிக்கச் சென்று விட்டார். கார்த்திக் கோவை பேரூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார்.
கார்த்திக் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் சூர்யா பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அடிக்கடி வீடியோகாலில் பேசி இருக்கிறார். அந்த பெண்ணுக்கு தெரியாமல் சில புகைப்படங்களையும் சூர்யா எடுத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. இது கார்த்திக்கிற்கு தெரிந்து ஆத்திரம் அடைந்தார். தனது காதலியை சூர்யா அபகரிக்க முயல்வதாக கருதினார்.
இதனால் சூர்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்கு தனது நண்பர்களான கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நவீன்கார்த்திக், கிணத்துக்கடவைச் சேர்ந்த மாதேஷ் (21), போத்தனூரைச் சேர்ந்த முகமது ரபி (21) ஆகியோரின் உதவியை நாடினார்.
சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டு அவரிடம் நைசாக பேசி கோவைக்கு வரவழைத்தனர். பின்னர் கார்த்திக் பேரூரில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு சூர்யாவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கார்த்திக்கின் நண்பர்கள் 3 பேரும் வந்தனர். முதலில் சூர்யாவுக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். மது குடித்ததில் போதையான சூர்யாவின் கை, கால்களை கட்டி இருக்கிறார்கள். தொடர்ந்து சூர்யாவின் உடலில் போதை ஊசி செலுத்தி உள்ளனர். இதில் சூர்யா மயக்கம் அடைந்துள்ளார். உடனே தலையணையால் அமுக்கி அவரை துடி, துடிக்க கொன்றுள்ளனர்.
சூர்யா உடலை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் வீச முடிவு செய்து உடலை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். குப்பைக்கிடங்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் உடலை அங்கு வீச முடியவில்லை. அதன்பின்னர் அருகே உள்ள பஸ் நிலைய கட்டிடத்துக்குள் வீசி விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் நவீன்கார்த்திக், மாதேஷ், முகமது ரபி ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இவர்களில் நவீன்கார்த்திக், மாதேஷ் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர்கள். முகமது ரபி, வாடகை மோட்டார்சைக்கிள் ஓட்டி வருகிறார்.
கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் போதை ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.