சாதி, மதம் என எதுவும்.. டிஜிட்டல் உலகிற்கு தடை இல்லை - மடிக்கணினி வழங்கும் விழாவில் மயில்சாமி அண்ணாதுரை
- என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவியது.
- அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ''வருங்காலத்தில் செயற்கை அறிவாளி, இயற்கை அறிவாளி என்று நிலை வரக்கூடும். அடுத்த தலைமுறையை சரியாக படிக்க வைக்க வேண்டும்.
ஏன்? எதற்கு? எப்படி? என்ற அறிவார்ந்த கேள்விகளால் நம் மூளைக்கு உரம் சேர்க்க வேண்டும்.
சிறு மடிக்கணினி தனிப்பட்ட முறையில் என்னை வளரச் செய்துள்ளது. என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவியது.
பணி ஓய்வுக்கு பின் பல அறிவியல் சார்ந்த துறை நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்குகளிலும் பங்கேற்று பேசு வருகிறேன். கட்டுரைகள் எழுது வருகிறார். இவற்றுக்கு மடிக்கணினி எனக்கு உற்ற தோழனாக உள்ளது
ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வெறும் கருவி அல்ல, அவை மாணவர்காளை சாதிக்கச் செய்யும் சக்தி ஆகும்.
சாதி, மதம் என எதுவும் கல்விக்குத் தடையில்லை. ஆனால், மாறிவரும் கல்விச் சூழலில் தினம் தினம் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
டிஜிட்டல் உலகிற்கு தடை இல்லை. மடிக்கணினி கையில் வந்தவுடன் மாணவர்கள் சர்வதேச உலகத்தோடு இணைகின்றனர். அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.
ஏஐ தொழில்நுட்ப கல்வியை எடுத்துக்கொள்வதின் மூலம் தமிழ்நாடு அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும்' என்று தெரிவித்தார்.