தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் தி.மு.க. பொதுக்குழு: முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக கால்வாய் திரையிட்டு மறைப்பு

Published On 2025-05-31 12:04 IST   |   Update On 2025-05-31 12:04:00 IST
  • மதுரை வரும் அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
  • ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மாநாட்டு திடலின் நுழைவு பகுதியில் பசுமையாக காட்சிதரும் வகையில் பிரமாண்ட புல்வெளி தரையுடன் பூங்காவும், அதன் நடுவே செயற்கை நீரூற்று, நீரூற்றின் மத்தியில் 100 அடி உயர கொடி கம்பத்தில் தி.மு.க. வின் கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் என 4 ஆயிரம் பேர் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கான இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.

பொதுக்குழுவில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். மதுரை வரும் அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மாலையில் பிரமாண்ட ரோடு ஷோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகிற்னர். மேலும், ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோவிற்காக சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் திரைக்கட்டி மறைக்கப்பட்டுள்ளது.

பந்தல்குடி கால்வாயில் சாக்கடை நீர் கலந்து காணப்படுவதால் துணி கட்டி தி.மு.க.வினர் திரை அமைத்துள்ளனர். மேலும், பந்தல்குடியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் விளம்பர பலகையும் துணி கட்டி மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து திரையை தி.மு.க.வினர் நீக்கினர். 

Tags:    

Similar News