தமிழ்நாடு செய்திகள்

போர் எதிரொலி: இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Published On 2026-03-04 11:29 IST   |   Update On 2026-03-04 11:29:00 IST
  • சுற்றுலா பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.
  • இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர்.

தற்போது இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இவர்களின் பாதுகாப்புக்காக கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.

வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர் அந்த பகுதிக்கு சென்றாலும் அவர்களது முழு விபரங்களுடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளில் தங்கி இருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்கள், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வைத்திருக்க வேண்டும் என விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில், "கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். வழக்கம் போல் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் நிலவி வருவதால் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

Tags:    

Similar News