தமிழிசை தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு!
- திமுகவில் கனிமொழி தலைமையிலும், தவெகவில் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
- இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வியூகங்கள், தேர்தல் அறிக்கை பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவில் கனிமொழி தலைமையிலும், தவெகவில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முதற்கட்ட தேர்தல் அறிக்கையே வெளியாகிவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக அக்கட்சியின் மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
'தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் அமைக்கப்படுகிறது.' எனக் குறிப்பிட்டுள்ளது. இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.