தமிழ்நாடு செய்திகள்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2025-04-10 21:03 IST   |   Update On 2025-04-10 21:03:00 IST
  • தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
  • சஞ்சாரம் நாவலுக்காக 2018-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது

நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.

தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, ஞானவாணி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன.

விருது வழங்கும் விழா 01.05.2025 அன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது எனப் பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாரதிய பாஷா விருது பெறும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய அளவில் புகழ்மிக்க #BharatiyaBhashaParishad அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் பாராட்டுகள்!

சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, #SahityaAkademi, #இயல், #கலைஞர்_பொற்கிழி உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன்.

தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News