எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வருகிற மாதிரி தெரியல...! கிண்டல் செய்த ஆதவ் அர்ஜுனா
- பாஜகவே அதிமுக-வை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும்.
- அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார்.
மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக, தனியார் விடுதியில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது, இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு வந்தனர். அப்போது ஆதவ் அர்ஜுனா சிரித்துக் கொண்டே, பாஜகவே அதிமுக-வை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும். அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் பாஜகவும், திமுகவும் தங்கள் எதிரி என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதேவேளையில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதை விஜய் வலியுறுத்தினார். ஆனால் அதிமுக-வை பெரிய அளவில் விமர்சிக்கவில்லை.
இதன்மூலம் விஜய் கூட்டணிக்கு தயாராக இருக்கிறார் என்பது தெளிவானது. அதிமுக- தவெக இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதிமுக ஆட்சியில் பங்கு என்ற கொள்கையை ஏற்கவில்லை. மேலும், விஜய் தரப்பில் துணை முதல்வர், தவெக தலைமையில்தான் கூட்டணி போன்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
அதிமுக-வின் ஒரே இலக்கு திமுக அரசை வீழ்த்துவதுதான் என்பதால், நம்முடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என தவெக நினைத்தது.
இந்த நிலையில்தான் திடீரென அமித் ஷா, தமிழகம் வந்து, அதிமுக- பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனால் தவெக-வுக்கு தற்போது தனியாகத்தான் போட்டியிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வருகிற மாதிரி தெரியவில்லை என கிண்டல் செய்யும் வகையில் ஆதவ் அர்ஜுன் கூறியுள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவு அளிக்கப்படும் என பாஜக தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக-பாஜக இடையிலான கூட்டணி விரிசல் ஏற்பட வாய்புள்ளதாக தெரியவில்லை.