தமிழ்நாடு செய்திகள்

பச்சைப் பொய் சொல்கிறார் ஸ்டாலின்: திருத்தணியில் சீறிய எடப்பாடி பழனிசாமி

Published On 2025-12-29 21:42 IST   |   Update On 2025-12-29 21:42:00 IST
  • நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரகசியம் தெரியும் என்றார்கள் ரத்து செய்தார்களா? ரகசியத்தை சொன்னாரா?
  • சட்டமன்றக் கூட்டத்தில் எங்களால் முடியாது என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுவரும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 178வது தொகுதியான திருத்தணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து திருத்தணி, சோளிங்கர் சாலை, வீரகநல்லூரில் உள்ள திறந்தவெளித் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக இபிஎஸ் எழுச்சியுரையாற்றினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களை வணங்குகிறேன். இந்த எழுச்சிப் பயணத்தில் 178 தொகுதிகளிலும் மக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது.

இங்கு நான் அதிக அளவிலான மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். அடுத்தாண்டு தேர்தலில் திருத்தணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான வெற்றி விழா பொதுக்கூட்டம் போல் காட்சியளிக்கிறது. நான் வருகின்ற வழியில் மக்கள் வெள்ளம் அலைகடலென வந்தார்கள். நம் வெற்றியை உங்கள் எழுச்சியில் பார்க்க முடிகிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.

சென்னை முதல் திருத்தணி செல்லும் ரெயிலில் ரீல்ஸ் எடுத்தபடி 4 சிறுவர்கள் துன்பப்படுத்துகிறார்கள். கொடூரமாகத் தாக்குகிறார்கள். சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. திமுக-காரர்கள்தான் போதை விற்பனைக்கு துணை நிற்பதாக பேசப்படுகிறது. ஆட்சிக்கு வந்து ஓராண்டிலேயே போதை நடமாட்டத்தை கட்டுப்படுத்த பலமுறை சொன்னேன், கண்டுகொள்ளவில்லை. பெற்றோர்களே சிந்தியுங்கள், நம் குழந்தைகளை நாம்தான் பார்த்து வளர்க்க வேண்டும். இந்த ஆட்சியை நம்பி பிரயோஜனம் இல்லை.

நெல்லையில் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிகள் சரக்கு அடிக்கிறார்கள். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். பணம், நகை திருடுவது போல உடம்பில் உள்ள கிட்னி திருடுகிறார்கள். வறுமையில் வாடும் நபர்களை தேர்வு செய்து பணத்தாசை காட்டி கிட்னி எடுக்கிறார்கள். அதுவும் திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் நடக்கிறது. இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரகசியம் தெரியும் என்றார்கள் ரத்து செய்தார்களா? ரகசியத்தை சொன்னாரா? சட்டமன்றக் கூட்டத்தில் எங்களால் முடியாது என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின். இதுதான் அந்த ரகசியம். இதைத்தான் அதிமுகவும் சொன்னது. ஆனால் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று அந்தர்பல்டி அடித்துவிட்டது திமுக.

2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்தார். நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. அத்தனையும் பச்சைப்பொய். முதல்வரும் அமைச்சர்களும் 95% நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள், எல்லாம் பொய்.

100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார்கள், உயர்த்தவில்லை. அதிமுக தான் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது, அதனால்தான் 125 நாளாக உயர்த்தினார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் இத்திட்டம் ரத்து செய்யப்படும் என்ற பொய் தகவலை சொல்லி வருகிறார்.

ஸ்டாலின் அவர்களே உங்களால் உயர்த்த முடியவில்லை ஆனால் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் நிறைவேற்றிக் காட்டினோம். 100% இத்திட்டம் தொடரும். 125 நாட்கள் என்பது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 150 நாளாக உயர்த்தப்படும்.

எப்போது பார்த்தாலும் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தேன் என்கிறார் ஸ்டாலின். உங்கள் வீட்டுப் பணத்தையா கொடுத்தீர்கள்? அதுவும் அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துதான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது 17 லட்சம் பேருக்கு விதிகளை தளர்த்தி கொடுக்கிறார்கள், ஏன் அப்போதே நிபந்தனையைத் தளர்த்தியிருக்கலாமே?

மக்கள் செல்வாக்கு இழந்ததால் இப்போது கொடுக்கிறார், இன்னும் 5 மாதம்தான் கொடுக்க முடியும். 2021 தேர்தல் அறிக்கையில் அதிமுக சார்பில் மாதம் 1500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம், ஆனால் திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று, ஏமாற்றிவிட்டது.

கியாஸ் மானியம் 100 ரூபாய் கொடுத்தார்களா? கல்விக்கடன் தள்ளுபடி செய்தார்களா? கூடுதலாக சர்க்கரை ஒரு கிலோ கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுத்தார்களா? எதுவுமே நிறைவேற்றவில்லை. எல்லா துறைகளிலும் ஊழல், உள்ளாட்சியில் பணியாணை வழங்குவதில் ஊழல். இ.டி கண்டுபிடித்து எஃப்.ஐ.ஆர் போடச்சொன்னது, அதிமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் போடப்படும், தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

மின்கட்டணம், விலைவாசி உயர்வு, வீட்டுவரி, கடை வரி உயர்வு, கடன் தலைக்கு மேல் இருக்கிறது. 5 ஆண்டு முடியும்போது 5.5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர். அத்தனை பேரையும் கடனாளியாக்கிவிட்டார். வருவாய் அதிகம், திட்டங்கள் இல்லை. அதிமுக ஆட்சியில் 400 கோடியில் திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம், இது சாதனை. இப்படி ஒரு சாதனை சொல்ல முடியுமா?

திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் முருகனின் ஐந்தாம் படை விடு என்ற பெருமை பெற்றது. இங்கு உள்ளூர் மக்கள் வாரந்தோறும் செவ்வாய்கிழமை வழிபாடு செய்ய சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அந்த அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்படும்.

அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோதுதான் தைப்பூசத்துக்கு விடுமுறை விட்டோம்.

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள். இந்தக் கூட்டம் சீரோடு சிறப்போடு நடைபெற இருந்த அனைவருக்கும் நன்றி. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் பெயிலியர் மாடல் அரசு, பைபை ஸ்டாலின்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags:    

Similar News