தமிழ்நாடு செய்திகள்

வடமாநில இளைஞரை தாக்கிய சம்பவம்: தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

Published On 2025-12-30 10:52 IST   |   Update On 2025-12-30 10:52:00 IST
  • சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை.
  • பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது.

சென்னை:

திருத்தணி ரெயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

27.12.2025 அன்று, திருத்தணி ரெயில்வே குடியிருப்பு அருகே, சில நபர்களால் ஒருவர் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருத்தணி காவல் நிலையத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான உதவியும் அளிக்கப்பட்டது.

மேற்கொண்ட புலன் விசாரணையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன், சட்டத்துக்கு முரண்பட்ட 4 இளஞ்சிறார்கள் இந்த குற்றத்தை செய்திருப்பது தெரிய வந்தது.

அவர்கள் 4 பேரும் 28.12.2025 அன்று கைது செய்யப்பட்டு இளையோர் நீதிக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் 3 பேரும் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது சட்டப்படி தகுந்த மற்றும் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தவிர பிற மாநில நபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்தில் ஏதும் நடைபெறவில்லை. பிற மாநில நபர்கள் இங்கு பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதற்கு தகுந்த சூழல் நிலவுகிறது.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்கள் பணியாற்றும் இடங்களிலும் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இச்சம்பவத்தின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு, தாக்குதல் தொடர்பான இவ்வீடியோவை சமூக ஊடகதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பரப்பப்படுவதால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News