தமிழ்நாடு செய்திகள்

'திராவிட மாடல் 2.0 ஆட்சியும் பெண்களுக்கான ஆட்சியாகத்தான் இருக்கும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published On 2025-12-29 20:29 IST   |   Update On 2025-12-29 20:29:00 IST
  • தேர்தல் என்றாலே திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ.
  • கமலாலயத்தில் எழுதி தரும் அறிக்கையை, அதிமுக லெட்டர்பேடில் எழுதி தருகிறார் பழனிசாமி.

திருப்பூர் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில்  நடைபெற்ற 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 

"தேர்தல் என்றாலே திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. அந்த ஹீரோவையே தயாரிப்பவர்தான் கனிமொழி. நாடாளுமன்ற தேர்தலில் அவரின் இந்தப் பணியால் வெற்றிப் பெற்றோம். வரும் சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறுவோம். பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்.

பகுத்தறிவை கையில் ஏந்தி பெரியார், அண்ணா, கருணாநிதி கட்டியெழுப்பிய தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்கிறது. நீதிக்கட்சியின் முதல் கூட்டத்திலேயே கலந்துகொண்ட பெண் அலமேலு மங்கை தாயாளு அம்மாள். அதுபோல திராவிட இயக்கம், திமுக தொடங்கியபோதும் பல பெண்கள் கலந்துகொண்டனர். அண்ணா தலைமையில் அமைந்த அமைச்சரவையிலும் பெண்கள் பங்கேற்றனர். அண்ணா மகளிர் மன்றத்தை தொடங்கினார். அதை மகளிர் அணியாக விரிவாக்கி, வலுவான கட்டமைப்பை உருவாக்கினார் கருணாநிதி.

பெண்கள் படிக்கக்கூடாது, அடுப்படியைத் தாண்டி செல்லக்கூடாது என அடிமைப்படுத்தப்பட்டனர். அதை எல்லாம் உடைத்தெறிந்தது திராவிட இயக்கம்தான். தேவதாசியை முறையை ஒழித்தோம். திராவிட இயக்கமும், நம்முடைய தலைவர்களும் செய்த புரட்சியின் விளைவுதான் பெண் விடுதலை, மகளிர் முன்னேற்றம். இன்றைக்கு எல்லா கட்சிகளிலும் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளதற்கு நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம்.

உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டத்தை உருவாக்கியவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் பெண் மேயர்கள்தான் அதிகம் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புபோல சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதுதான் திமுகவின் வெற்றி. தேவையே இல்லாத நிபந்தனையோடு பெண்களுக்கான 33 விழுக்காடு மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ளது. அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை சொல்ல முடியாது. இது ஆபரேஷன் Success ஆனால் Patient dead என்பதை போல் உள்ளது.

1.30 கோடி மகளிருக்கு, மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை தருகிறோம். உரிமைத் தொகை பல பெண்களுக்கு சுயமரியாதையை, தன்னம்பிக்கையை அளித்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகையை ஒவ்வொரு குடும்பத்திலும் ரூ.28 ஆயிரம் வரை கொடுத்திருக்கிறோம். இதுபோன்ற மற்றொரு திட்டம்தான் மகளிர் விடியல் திட்டம். முதலமைச்சராக நான் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயண திட்டம். நான் முதலமைச்சரான அடுத்த நாள் பேருந்தில் ஏறியதும் டிக்கெட் வாங்க பணம் கொடுத்த பெண்களிடம் "மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துவிட்டார். இனிமேல் நீங்கள் பணம் கொடுக்க தேவையில்லை" என சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்முதலாக பெண்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினோம்.

அதன்பின் புதுமைப் பெண்திட்டம். பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இதில் பல லட்சம் பெண்கள் பயன் பெறுகின்றனர். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும் என இவ்வளவும் செய்கிறோம். 88% பெண்கள் பயனடைந்த 100 நாள் வேலைத் திட்டத்தை பாஜக அரசு சிதைத்துள்ளது. அதற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். கமலாலயத்தில் எழுதி தரும் அறிக்கையை, அதிமுக லெட்டர்பேடில் எழுதி தருகிறார் பழனிசாமி. 

திராவிட மாடல் ஆட்சிபோல பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த ஆட்சி இருக்கவே முடியாது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில், பெண்களுக்கான திட்டங்களை விரிவுபடுத்தப் போகிறோம்." என தெரிவித்தார். 

Tags:    

Similar News