தமிழ்நாடு செய்திகள்

அது கருத்து மோதல் அல்ல, கருத்து பரிமாற்றம்: பா.ம.க. மோதல் குறித்து அண்ணாமலை

Published On 2024-12-29 04:51 IST   |   Update On 2024-12-29 04:51:00 IST
  • பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
  • முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

சென்னை:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.

அந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.

நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள். நான் உருவாக்கிய கட்சி. எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் அழுத்தமாகக் கூறினார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அன்புமணியை சமாதானம் செய்ய கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனை கருத்து வேறுபாடு அல்ல, கருத்து பரிமாற்றம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News