தமிழ்நாடு செய்திகள்

டெல்லியில் முகாமிட்டுள்ள அன்புமணி... அரசியலில் அடுத்த கட்ட நகர்வு என்ன?

Published On 2025-06-30 07:51 IST   |   Update On 2025-06-30 07:51:00 IST
  • அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வரும் ராமதாஸ், அந்த பொறுப்புகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார்.
  • தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையேயான மோதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இருந்து தீவிரமாகி வருகிறது. இருவருக்கும் இடையே நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மேலும், அன்புமணி மற்றும் அவரது மனைவி சவுமியா மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு கூறி வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தல் அன்புமணியின் வற்புறுத்தலின் பேரிலே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததாக ராமதாஸ் கூறிய நிலையில், அவர் சொல்லியே பா.ஜ.க.வினர் தைலாபுரம் தோட்டத்திற்கு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்ததாக அன்புமணி கூறினார். இருவரும் மாறிமாறி குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.

இதனிடையே, அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வரும் ராமதாஸ், அந்த பொறுப்புகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார்.

இந்த நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்றுள்ளார். அவர் அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரையும் அன்புமணி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அன்புமணி டெல்லியில் முகாமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இவரது நடவடிக்கையை தொடர்ந்து ராமதாசின் நடவடிகை என்னவாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்களால் உற்று நோக்கப்படுகிறது. 

Tags:    

Similar News