கோவையில் இன்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் முகாம்
- பலர் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.
- அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உறுதி அளித்தனர்.
கோவை:
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை குடும்பத்தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆண்களுக்கும் இலவச பஸ் பயணத்திட்டம் செயல்படுத்தப்படும் என பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அதில் இடம் பெற்று இருந்தன.
இதற்கிடையே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டு மாவட்டம் வாரியாக அந்த குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்தந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்திசெய்யும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று கோவை வந்தனர். கோவை காளப்பட்டி ரோடு சுகுணா கலையரங்கத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள், தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். பலர் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விசுவநாதன், பொன்னையன், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், வளர்மதி, ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார், தாமோதரன், செ.ம.வேலுசாமி, வைகைசெல்வன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், ஏ.கே. செல்வராஜ், சூலூர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டனர்.
பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உறுதி அளித்தனர். இதுதொடர்பாக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.