'தற்காப்புக்காகதான் தெருநாய் மனிதனை கடிக்கிறது' - திருச்சி பேரணியில் பேசிய விலங்குகள் நல ஆர்வலர்
- தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
- தெருநாய்களுக்கு ஆதரவாக திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்
டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து திருச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.
அந்த பேரணியில் பங்கேற்று பேசிய பெண் ஒருவர், "தெருநாய்க்கு ஒரு பிஸ்கட் போட்டால் காலம் முழுக்க அந்த நாய் வாலாட்டி கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட நாயை அடைக்க வேண்டும் என்று சொல்வது மனிதாபிமானமா? தெருநாய்கள் மனிதர்களை கடிக்கிறது என்று கூறுகிறீர்களே? எதாவது ஒரு மனிதன் நாயை அடித்து உதைப்பதால் தான் இன்னொரு மனிதனை நாய் கடிக்கிறது. ஒரு மனுஷன் செஞ்ச கேவலமான செயலால்தான், தற்காப்புக்காக இன்னொரு மனுஷனை நாய் கடிக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மனிதாபிமானத்தை கற்றுக்கொடுக்க வில்லை என்றால் யார் கற்று கொடுப்பது? நாய்கள் தற்காத்து கொள்ள தான் மனிதர்களை கடிக்கிறது" என்று தெரிவித்தார்.