கோவையில் 3-வது தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: வரும் 25ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
- தமிழக அரசு தொழில்துறை சார்பில் தமிழ்நாடு வளர்கிறது தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி கோவை வருகிறார்.
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்குவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது.
சென்னையில் மட்டுமே வளர்ச்சி, தொழில் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை நின்று விடக்கூடாது அனைத்து மாவட்டங்களுக்கும் இது பகிரப்பட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு தொழில்துறை சார்பில் தமிழ்நாடு வளர்கிறது (டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது.
முதல் மாநாடு கடந்த ஆகஸ்டு மாதம் தூத்துக்குடியிலும், 2-வது மாநாடு கடந்த செப்டம்பர் மாதம் ஓசூரிலும் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடந்த முதல் மாநாட்டில் ரூ.32 ஆயிரத்து 554 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஓசூரில் நடந்த 2-வது மாநாட்டில் ரூ.24 ஆயிரத்து 307 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது.
இந்த நிலையில் தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து 3-வது தமிழ்நாடு வளர்கிறது(டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு கோவையில் நடக்க உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி கோவை வருகிறார்.
கோவையில் நடைபெறும் 3-வது தமிழ்நாடு வளர்கிறது(டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
கோவையில் நடைபெறும் இந்த மாநாடானது மின்னணுவியல், பொது உற்பத்தி, ஜவுளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் விதமாக நடக்க உள்ளது.
இதுதொடர்பாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறும்போது,"தொழில் நகரமாக கோவை மாறி உள்ளது. உலகளாவிய திறன் மையமாக இருப்பதால் புதிதாக தொழில் தொடங்க ஏராளமானோர் கோவைக்கு வருகிறார்கள்.
இதன்மூலம் உள்ளூர் திறமையாளர்கள், உள்கட்டமைப்பு மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைப்பதற்காக உதவி வருகிறோம். அந்த வகையில் கோவையில் 3-வது தமிழ்நாடு வளர்கிறது தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது" என்றார்.
இந்த மாநாடு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை பகுதிக்கு செல்கிறார். அங்கு ரூ.214.25 கோடி மதிப்பில் 45 ஏக்கரில் உருவாகியுள்ள செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.
முதலமைச்சர் வருகையையொட்டி அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் செம்மொழி பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்ற கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.கவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.