தமிழ்நாடு செய்திகள்

பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

Published On 2025-05-04 13:07 IST   |   Update On 2025-05-04 13:07:00 IST
  • பாலப்பணிக்காக 10 அடியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து நாகராஜ், ஆனந்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஊதியூர் இடையே குள்ளாய்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அங்கு பாலப்பணிக்காக 10 அடியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து நாகராஜ், ஆனந்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-காங்கேயம் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு ஒரு லட்ச ரூபாயும் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News