தமிழ்நாடு

கமலுக்கு கிடைக்கப்போவது கையா அல்லது சூரியனா? - 'டார்ச் லைட்'டைவிட மனம் இல்லாமல் தவிப்பு

Published On 2024-03-08 05:32 GMT   |   Update On 2024-03-08 05:52 GMT
  • தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
  • உதயசூரியன் அல்லது கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கமல்ஹாசனிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சென்னை:

பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் நேற்று முன் தினம் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதை தொடர்ந்து கமல்ஹாசன் நேற்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.

தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கோவை, தென்சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் ஒரு இடத்தில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் உதயசூரியன் அல்லது கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கமல்ஹாசனிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கமல்ஹாசனோ மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமான 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவதையே விரும்புகிறார். அப்போதுதான் தனது தனித்துவத்தை காட்ட முடியும் என்று அவர் நம்புகிறார்.

ஆனால் தி.மு.க. தரப்பிலோ, நாங்கள் ஒதுக்கும் இடத்தில் போட்டியிட்டால் உதயசூரியன் சின்னத்திலேயே களம் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் ஒதுக்கீட்டில் போட்டியிடுவதாக இருந்தால் கை சின்னத்திலேயே நிற்க வேண்டும் என்று அந்த கட்சி கூறி வருகிறது.

இதனால் என்ன முடிவை எடுக்கலாம் என்பது பற்றி கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

Tags:    

Similar News