தமிழ்நாடு

ஒரே நாளில் ரூ.8லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் சோதனையில் சிக்கி தவிக்கும் திருப்பூர் வியாபாரிகள்

Published On 2024-03-22 09:42 GMT   |   Update On 2024-03-22 09:42 GMT
  • ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
  • சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

திருப்பூர்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

திருப்பூர் பூண்டி ரிங்ரோடு பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் பொல்லி காளி பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.93,200ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தேர்தல் துணை மாநில வரி அலுவலர் பக்கிரி சாமி (பறக்கும் படை குழு) உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வீரபாண்டி, பிரியங்கா நகர் பகுதியை சேர்ந்த கே. சாமிநாதன் என்பவர் ரொக்கப்பணம் ரூ.57 ஆயிரத்து 980ஐ முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு வந்தது தெரிய வந்தது.

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று ஒரே நாளில் ரூ.8 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பறக்கும் படையினரின் சோதனையில், சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

இது குறித்து திருப்பூர் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

என்னதான் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்த போதும் சில நேரங்களில் ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டு தான் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறாக ரொக்க பரிவர்த்தனை வழக்கமாக நடைபெறும் ஒன்று.ஆவணங்களை வைத்து கொண்டு இது போன்ற பரிவர்த்தனைகள் பெரும்பாலும் நடப்பதில்லை. தேர்தல் நேரத்தில் நடக்கும் பண பட்டுவாடாவை தடுக்க இதுவரை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

மாறாக சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் சிறிய வியாபாரிகளே இது போன்ற சோதனையில் சிக்குகின்றனர். பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெறுவதற்காக ஏற்படும் தேவையற்ற அலைச்சல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News