சத்துணவு ஊழியர்கள் போராட்டத்திற்கு உடனே தீர்வு காண வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
- சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்.
- சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 38 சத்துணவு மையங்களில் இப்போதைய நிலையில் 71 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களும் முடங்கி விடும்; அதனால், அந்த மையங்களை நம்பியுள்ள 40.82 லட்சம் மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும்.
சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்; அவர்கள் தான் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்குபவர்கள். எனவே, இனியும் தாமதிக்காமல் சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.