தமிழ்நாடு

பிரதமர் தான் உண்மையான டெல்டாகாரர்: அண்ணாமலை பேச்சு

Published On 2023-11-28 05:51 GMT   |   Update On 2023-11-28 05:51 GMT
  • தி.மு.க. அரசு தொடர்ந்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி வருகிறது.
  • தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதூர் பகுதியில் இருந்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நடைபயணத்தை நேற்று தொடங்கினார். தொடர்ந்து, அவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஒரத்தநாடு அண்ணாசிலை பகுதிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தி.மு.க. அரசு தொடர்ந்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி வருகிறது. காவேரி பிரச்சினைகளை முந்தைய காலங்களில் தி.மு.க. அரசு சரிவர கையாளத காரணத்தினால் தான் கர்நாடகா தொடர்ந்து அணைகளை கட்டி விட்டது. இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தி.மு.க. அரசு தேர்தலின் போது அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் மாறாக 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி ஏமாற்றுகிறார்.

மீத்தேன் எரிவாயு

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் மீதும், தமிழகத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். காவேரி பிரச்சினை, மீத்தேன் எரிவாயு போன்றவற்றில் தமிழக விவசாயிகளின் நலன் சார்ந்த விவசாய கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், நெல்லுக்கான விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து நடை முறைப்படுத்தி வருகிறார்.

எனவே, வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடைபயணம் மேற்கொண்டார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் இணைந்து மக்களை பார்த்து கை அசைத்தபடி நடைபயணமாக சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தனது பிரசார வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, தனது சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் 3 ஆயிரம் ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை.

பா.ஜனதாவை பொறுத்தவரை கடந்த மார்ச் 29-ந்தேதி ஒட்டு மொத்தமாக 8 மண்டலங்களில் நிலக்கரி திட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் டெல்டாவும் சேர்க்கப்பட்ட நிலையில், இப்பகுதி பா.ஜனதா நிர்வாகிகள் வேண்டுகோளின்படி, நான் நேரடியாக நிலக்கரித்துறை மந்திரியை சந்தித்து அந்த திட்டத்தை டெல்டாவில் நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு பெற்று அரசாணை வெளியிட வைத்தோம்.

தஞ்சாவூரில் விமான போக்குவரத்து தொடங்க பா.ஜனதா சார்பில் விமான போக்குவரத்து துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி தான் உண்மையான டெல்டாகாரர்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Tags:    

Similar News