தமிழகத்தில் பிரதமர் மோடி 3 முறை பிரசாரம் செய்ய திட்டம்
- தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு 5 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார்.
- எல்லா தொகுதிகளுக்கும் மத்திய மந்திரிகள் சென்று பிரசாரம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
அடுத்ததாக பிரசார திட்டங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். வேட்பு மனுதாக்கல் வருகிற 27-ந்தேதியுடன் முடிகிறது. 30-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பிரசாரம் அனல் பறக்கும். பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடியும் வருகிறார். ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு 5 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். அப்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசினார். கோவையில் 'ரோடு-ஷோ'வும் நடத்தினார்.
தனது சுற்றுப்பயணத்தின் போது கண்ட எழுச்சியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதுபற்றி தனது வலைதள பக்கத்தில் தமிழகத்தில் அற்புதமான மாற்றம் நிகழும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா எதிர்பாராத வெற்றி பெற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தமிழகம் முழுவதும் பிரசாரங்களை ஏற்பாடு செய்யும் படி கட்சி தலைவர் நட்டாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமரின் சுற்றுப்பயணத்தில் இதுவரை இடம் பெறாத டெல்டா பகுதிகள் மற்றும் வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் பிரசாரம் செய்யும் வகையில் பிரசார திட்டம் தயாராகிறது. மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக தலைவர்கள் சுற்றுப்பயண திட்ட குழுவுடன் ஆலோசித்து வருகிறார்.
இது தவிர 18 மத்திய மந்திரிகளும் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்யும் வகையில் திட்டமிட்டுள்ளார்கள். உள்துறை மந்திரி அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், வி.கே.சிங், கிஷன்ரெட்டி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 18 மந்திரிகள் வருகிறார்கள்.
எல்லா தொகுதிகளுக்கும் மத்திய மந்திரிகள் சென்று பிரசாரம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரத்துக்கு வருகிறார். கோவை, கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதுபற்றி பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-
திராவிட மாயையில் இருந்து மக்களை மீட்க வேண்டும். இந்த முறை தமிழகமும் பா.ஜனதா பக்கம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதில் பா.ஜனதா மேலிடம் தீவிரமாக உள்ளது. அதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டு பணிகளை தொடங்கி விட்டோம். அதற்காக 10 தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளுக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
எனவே அந்த தொகுதிகளை குறி வைத்து பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் அமையும். முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களை ஒருங்கிணைத்து அந்தந்த மாநிலங்களில் பிரசாரம் செய்யும்போது தமிழகத்திலும் எந்தெந்த பகுதிகளுக்கு வந்து செல்வது எளிதாக இருக்கும் என்பதை பார்த்து பயணத் திட்டம் அமையும் என்றார்கள்.