தமிழ்நாடு செய்திகள்

அரசு உத்தரவு புறக்கணிப்பு... கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு

Published On 2024-01-24 13:00 IST   |   Update On 2024-01-24 13:00:00 IST
  • பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
  • அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

சென்னை:

சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

ஆம்னி பஸ்கள் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது.

அரசு இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத போதிலும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும். மாநகரப் பகுதியில் உள்ள பயணிகள் எங்கு முன்பதிவு செய்துள்ளார்களோ அந்த பகுதிக்கு நேரில் சென்று பயணம் மேற்கொள்ளலாம் என கூறினார்.

Tags:    

Similar News