அ.தி.மு.க.விற்குக் கொள்கை என்ற ஒன்றே கிடையாது.. ஸ்பேசஸ்-இல் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்
- பெரிய பெரிய மாநாடெல்லாம் நடத்த வேண்டும் என்று இல்லை.
- மக்களை திசைதிருப்ப - ஏமாற்ற அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தின் இறுதி நாளில் ஸ்பேசஸ்-இல் சிறப்புரை வழங்கினார். அதில் பேசிய அவர், "சமூக வலைத்தளங்களை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக பார்க்காமல், சமூகத்தை முன்னேற்றுவதற்கான தி.மு.க. கொள்கைகளை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்."
"பெரிய பெரிய மாநாடெல்லாம் நடத்த வேண்டும் என்று இல்லை; நம்முடைய கருத்துகளை - கொள்கைகளை இன்னொருவரிடம் பேசுவதே, மிகப்பெரிய பரப்புரைதான். ஃபேஸ்புக் - யூடியூப் - வாட்ஸ்அப் - ட்விட்டர் - இன்ஸ்டாகிராம் - ஷேர்சாட் – டெலிகிராம் என்று நிறைய வசதிகள் வந்துவிட்டது. மக்களை திசைதிருப்ப - ஏமாற்ற அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்."
"அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் பொய்ச் செய்திகளையும் அவதூறுகளையும் பரப்புவதற்காகவே சம்பளம் கொடுத்து வேலைக்கும் – கூலிக்குத் தனியாகவும் ஆட்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்றைக்காவது கொள்கையைப் பேசிப் பார்த்து இருக்கிறீர்களா? சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஆதரித்து – வெறுப்பை விதைக்கும் பா.ஜ.க.வால் அதன் கொள்கையை தமிழ்நாட்டில் பேச முடியாது. அ.தி.மு.க.விற்குக் கொள்கை என்ற ஒன்றே கிடையாது," என்று தெரிவித்தார்.