தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி விழா - தர்கா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஆணை

Published On 2025-12-26 14:54 IST   |   Update On 2025-12-26 14:54:00 IST
  • கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் சந்தனக்கூடு தொடங்கியது.
  • ஏற்கனவே 3 நீதிபதிகள் அமர்வு கந்தூரி நடத்த தடை விதித்துள்ள நிலையில் தர்கா கமிட்டி கந்தூரி நடைபெறும் என தெரிவித்துள்ளது.

மதுரை:

மதுரையைச் சேர்ந்த மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவை கமிட்டி அமைத்து நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு கடந்த 21-ந் தேதி தொடங்கி ஜனவரி 6-ந் தேதி வரை நடைபெறும் என தர்கா தரப்பில் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் சந்தனக்கூடு தொடங்கியது. இந்நிலையில் தர்கா தரப்பில் அச்சிடப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்களில் கந்தூரி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட கூடாது என்றும் அதற்கான தீர்வை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தர்கா தரப்பில் இதுவரை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் இந்த வருடம் கந்தூரி நடைபெறும் என்றும், அதற்காக மாவட்ட நிர்வாக தரப்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது எனவும் செய்தித் தாள்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 நீதிபதிகள் அமர்வு கந்தூரி நடத்த தடை விதித்துள்ள நிலையில் தர்கா கமிட்டி கந்தூரி நடைபெறும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜோதி ராமன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஏற்கனவே மூன்று நீதிபதிகள் மரபு கந்தூரி விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், தர்கா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News