தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசில் 50 சதவீதம் இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்: கே.எஸ்.அழகிரி

Published On 2024-01-04 11:33 IST   |   Update On 2024-01-04 11:33:00 IST
  • பா.ஜனதாவை பொறுத்தவரை எதிர்பாராத மாற்றம் வரும் என்று கனவு காண்கிறார்கள்.
  • அ.தி.மு.க.வை பொறுத்தவரை நம்பகத்தன்மையுடனும், உண்மையுடனும் இல்லை.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ்-தி.மு.க. மிகவும் நெருக்கமாக உள்ளது. அதேபோல் எங்கள் தலைவர் ராகுலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் நெருக்கமாக இருக்கிறார்கள்.

எனவே தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் எழாது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே எண்ணிக்கை குறையாமலும், அதே தொகுதிகளையும் மீண்டும் கேட்டுப்பெற வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் வலியுறுத்துவோம்.

இதுவரை ஒரே தரப்பினர்தான் மீண்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இது மற்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்துகிறது.

எனவே வருகிற தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதுவரை தேர்தலில் போட்டியிடாத இளைஞர்கள்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மேலிடத்தில் வலியுறுத்துவோம்.

பா.ஜனதாவை பொறுத்தவரை எதிர்பாராத மாற்றம் வரும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் ஏமாற்றத்தையே தமிழக மக்கள் பரிசாக வழங்குவார்கள்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை நம்பகத்தன்மையுடனும், உண்மையுடனும் இல்லை. பா.ஜனதாவுடனான அவர்கள் நிலைப்பாடு என்ன? என்பது தெரியவில்லை. பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறினார்கள்? என்பதையும் தெரிவிக்கவில்லை. இன்னும் இரு கட்சிகளுக்கும் இடையே கள்ள உறவு இருப்பதாகவே தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News