தமிழ்நாடு செய்திகள்

தமிழக தேர்தல் களத்தை சூடேற்றி அனல் பறக்க செய்யும் "கச்சத்தீவு"

Published On 2024-04-03 12:59 IST   |   Update On 2024-04-03 12:59:00 IST
  • கச்சத்தீவு இந்தியாவுக்கு தொல்லை என்று நேருவும், ஒரு சிறிய பாறை பகுதிதான் என்று இந்திராவும் கூறியதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
  • கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

சென்னை:

தேர்தல் களத்தை பொறுத்தவரை ஏதாவது ஒரு பிரச்சனை முக்கிய பங்கு வகிக்கும். அதுபற்றி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளும் பிரசார களத்தில் பிரித்து மேயும்.

அந்த வகையில் இந்த தேர்தல் களத்தில் கச்சத்தீவு பிரச்சனை பெரிதாக அனல் பறக்க வைத்துள்ளது.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கச்சத்தீவு பிரச்சனை பற்றி தகவல்களை கேட்டு அறிந்தார். அந்த விவரங்களை அவர் வெளியிட்டதும் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரும் விளக்கம் அளித்ததால் பிரச்சனை பூதாகரமானது.

1974-ல் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு தெரிந்தே கச்சத்தீவு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது.

இந்த விவகாரத்தில் 21 முறை தமிழக முதலமைச்சருக்கு விளக்கம் அளித்து இருக்கிறேன் என்றார் ஜெய்சங்கர்.

விளக்கம் அளித்தது இருக்கட்டும். கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கச்சத்தீவு இந்தியாவுக்கு தொல்லை என்று நேருவும், ஒரு சிறிய பாறை பகுதிதான் என்று இந்திராவும் கூறியதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விட்டு தேர்தலுக்காக பிரதமருக்கு மீனவர்கள் மீது திடீர் பாசம் ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜனதா என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், மீனவர் பிரச்சனையை திசை திருப்பவே கச்சத்தீவு பிரச்சனையை பா.ஜனதா இப்போது கையில் எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News