தமிழ்நாடு

தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார் என மனசாட்சியோடு பதில் சொல்லட்டும்

Published On 2024-03-16 05:21 GMT   |   Update On 2024-03-16 05:21 GMT
  • விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
  • பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

செய்துங்கநல்லூரில் பாலக்காடு விரைவு ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி கனிமொழி எம்.பி.யிடம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-


தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார்? இவ்வளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு ரூபாய் கூட கொடுத்துள்ளாரா என்று மனசாட்சியோடு பதில் சொல்லட்டும்.

இதுவரைக்கும் தமிழ் நாட்டிற்கு என என்ன செய்துள்ளார்கள்? நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும் சாமானியனுக்கும் இவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? வேலை வாய்ப்புகள் இல்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலை.

இவ்வாறு அவர் கூறினார்.


பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்து வருவதாக வானதி சீனிவாசன் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அவர், கலாம் கனவு காணுங்கள் என்று கூறி உள்ளார்.கனவு காண்பது அவர்களது உரிமை.

பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News