டெல்லி இல்லத்தில் தனியாக சந்திப்பு: ராகுலுடன், கமல்ஹாசன் ஒருமணி நேரம் பரபரப்பான அரசியல் பேச்சு
- கமல்ஹாசனை பொறுத்தவரையில் காங்கிரசுடன் கை கோர்த்து குறிப்பிடத்தக்க இடங்களை பெற்று போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
- காங்கிரசுடன் கூட்டணி அமைத்து கொண்டு 2 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் உள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியையே தழுவினார்.
தனித்து நின்று போட்டியிட்டு தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியாது என்கிற நிலையிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளது. இதனால் கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அரசியலை கையில் எடுக்க முடிவு செய்துள்ளார்.
கட்சி தொடங்கிய நாள் முதல் பாரதிய ஜனதா எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தே கமல்ஹாசன் பயணித்து வருகிறார். தனது அறிக்கைகள், டுவிட்டர் பதிவுகள் மூலமாக அவ்வப் போது பாரதிய ஜனதா அரசின் திட்டங்களை காட்டமாக விமர்சிப்பதும் கமலின் வழக்கம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் நேருக்கு நேர் மோதலிலும் அவர் ஈடுபட்டார். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனை எதிர்த்து களம் கண்ட கமல்ஹாசன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக தீவிரமாக களமாட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதற்காக காங்கிரசுடன் கைகோர்க்க அவர் திட்டமிட்டு உள்ளார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றது.
இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று பலத்தை காட்டியது. வருகிற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் இதே அளவுக்கு தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு அந்த கட்சி முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறது.
கமல்ஹாசனை பொறுத்தவரையில் காங்கிரசுடன் கை கோர்த்து குறிப்பிடத்தக்க இடங்களை பெற்று போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து கொண்டு 2 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தியும் கமல்ஹாசனும் எப்போதும் நெருங்கிய நட்புடன் இருப்பவர்கள். இருவரும் சந்தித்து கொள்ளும் நேரங்களில் பல்வேறு விஷயங்களை பற்றி மனம் விட்டு பேசிக் கொள்வது உண்டு. அந்த வகையில் டெல்லியில் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் கடந்த 24-ந்தேதி பங்கேற்றார்.
அப்போது டெல்லி செங்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கமல்ஹாசன் பேசுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சி வழங்கியது. இது கமல்ஹாசனுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். ராகுல் காந்தியும், கமல்ஹாசனும் இந்த நடைபயணத்தின் போது பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டே நடந்து சென்றதையும் காண முடிந்தது.
இந்த ஒற்றுமை நடைபயணம் முடிந்த பின்னர் ராகுல்காந்தி, கமல்ஹாசனை தனது வீட்டுக்கு அழைத்திருந்தார். இதனை ஏற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு கமல்ஹாசன் சென்றார். அப்போது தனது ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்றதற்காக கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் ராகுலின் இல்ல வளாகத்தில் இருவரும் நடந்து சென்றபடியே சுமார் ஒரு மணி நேரம் வரையில் உரையாடினார்கள். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி ராகுலும், கமல்ஹாசனும் பரபரப்பாக பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு அனைத்து மாநில கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதை பாரதிய ஜனதா எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ராகுல்-கமல்ஹாசன் இருவரும் விரிவாக பேசியுள்ளனர். இந்திய அரசியல் களத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அரசியல் வியூகங்கள் பற்றியும் இருவரும் விவாதித்தனர்.
இது தொடர்பாக கருத்துகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டர்.
பாரதிய ஜனதா ஆட்சியில் நாட்டில் நிலுவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இருவரும் பேசி உள்ளனர். விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் நலனை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர் நலன் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, இந்தி மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்து உள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் பலம் வாய்ந்த கூட்டணியாகவே விளங்கி வருகிறது. இந்த கூட்டணியில் கமல்ஹாசனும் சேரும் பட்சத்தில் அது வலுவான கூட்டணியாக மாறும் என்பதே ராகுலின் கணிப்பாக உள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி, காங்கிரசுடன் கைகோர்த்து பாரதிய ஜனதாவை வீழ்த்த தயாராகி வருகிறது என்றே அரசியல் நோக்கர்களும் கணித்து உள்ளனர்.