தமிழ்நாடு

நிரபராதி என்றால் சட்டப்படி சந்திக்க வேண்டியது தானே... அமைச்சர் ரகுபதிக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

Published On 2024-03-10 08:30 GMT   |   Update On 2024-03-10 08:30 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
  • 10 நாட்களில் தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னை:

தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும், டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கின் தொடர்பு பற்றியும் கவர்னரை சந்தித்து புகார் அளிக்கப் போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதன்படி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார். பின்னர் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்த பட்டியல் அடங்கிய புகார் மனுவை அளித்தார்.

கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சி.வி.சண்முகம் போதைப்பொருட்களின் நடமாட்டம் பற்றியும், டெல்லியில் கைதான ஜாபர் சாதிக் பற்றியும் விளக்கி கூறினார்.

கவர்னரை சந்தித்து விட்டு வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தி.மு.க. அயலக அணி நிர்வாகியான ஜாபர் சாதிக் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பல தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

3 ஆண்டுகளில் அவர் 45 முறை போதைப்பொருட்களை கடத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்புக்கு பயன்படுத்தி இருப்பதாகவும் தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்கி இருப்பதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இயக்கிய சினிமா படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து உள்ளார். முதலமைச்சர், உதயநிதியை சந்தித்து நிதி அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரி கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

இப்படி போதைப்பொருள் மூலமாக சம்பாதித்த பணத்தை வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கே:- போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வை களங்கப்படுத்த முயற்சிகள் நடப்பதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறாரே?

ப:- போதைப்பொருள் கடத்தலில் இருந்து மக்களை திசை திருப்ப தி.மு.க.வினர் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் சீரழிந்து விடுவார்கள்.

10 நாட்களில் தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க. நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதால் அது பற்றி அதிகாரிகள் வெளியில் தெரிவித்துள்ளனர். தங்கள் மீது குற்றமில்லை. மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்படுகிறார்கள். போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தால் தி.மு.க.வினர் நடுங்கிப் போய் உள்ளனர். பதற்றத்தில் இருக்கிறார்கள். தவறு செய்யவில்லை நாங்கள் நிரபராதி என்றால் சட்டப்படி சந்திக்க வேண்டியது தானே.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Tags:    

Similar News