தி.மு.க. ஆட்சியில் 33 மாதத்தில் போலீஸ் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்துக்கு, கழகத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறி உள்ளார்கள்.
- முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநர் முருகன், விபத்தை ஏற்படுத்தியதற்காக சில காவலர்கள் வேனிலேயே கடுமையாகத் தாக்கியதோடு, மனிதாபிமானமற்ற முறையில் முதலுதவிகூட அளிக்காமல், தனியார் மருத்துவமனையில் வேனோடு அப்படியே விட்டுவிட்டுச் சென்றதால் உயிரிழந்துள்ளார்.
எனது அறிவுரையின்படி, உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்துக்கு, கழகத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறி உள்ளார்கள்.
தி.மு.க. அரசு பதவியேற்ற 33 மாதங்களில் காவல் நிலைய மரணங்கள், காவலர்களால் தாக்குதலுக்குள்ளாகிய மரணங்கள் என்று சுமார் 18 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே, தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் அதிகாரி விசாரணைக் கைதிகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் பற்களை பிடுங்கிய சம்பவமும் நடந்துள்ளது. எனவே, காவல்துறையினருக்கு இந்த அரசு மன ரீதியிலான பயிற்சி அளிக்க வலியுறுத்துகிறேன்.
முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், முருகனின் மனைவிக்கு அவரது தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.