சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்
- கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
- டெல்லியில் நட்சத்திர விடுதி ஒன்றில் விஜய் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் நேரில் சம்பவத்தை பார்த்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, கரூர் சம்பவம் தொடர்பாக கடந்த 12-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். அப்போது அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து விஜயிடம் மேலும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருந்த நிலையில், பொங்கல் விடுமுறையை காரணம் காட்டி அடுத்த நாட்களில் ஆஜராக விஜய் விலக்கு கேட்டு இருந்தார். இதை ஏற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் நாளை ஆஜராகுமாறு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், நாளை சி.பி.ஐ. விசாரணைக்காக ஆஜராக உள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லியில் நட்சத்திர விடுதி ஒன்றில் விஜய் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.