தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. அரசு திட்டங்களுக்கு தி.மு.க. மூடு விழா நடத்துகிறது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published On 2023-06-18 12:52 IST   |   Update On 2023-06-18 12:52:00 IST
  • தி.மு.க. அரசின் சாதனை. லஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது என்பதை மக்கள் உணர வேண்டும்.
  • தி.மு.க. ஆட்சி எப்போது அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா நான் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது. தி.மு.க. அரசு வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டம்.

நம்முடைய மாணவ செல்வங்கள் அறிவுபூர்வமான கல்வியை பெறுவதற்கு மடிக்கணினி கொடுத்தோம். இந்த மடிக்கணினி திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். ஆகவே நல்ல பலன் தரும் திட்டங்கள் எல்லாம் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. அம்மா மினி கிளீனிக் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அற்புதமான திட்டத்தை பொறுக்க முடியாமல் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக நிறுத்தி விட்டார்கள். அ.தி.மு.க. அரசு திட்டங்களுக்கு தி.மு.க. மூடு விழா நடத்துகிறது.

இன்றைக்கு விலைவாசி உயர்ந்து விட்டது. அதை பற்றி கவலை இல்லை. வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தி விட்டார்கள். அதை பற்றியும் கவலையில்லை. குடிநீர் வரி, குப்பை வரி போன்றவற்றையும் உயர்த்தி விட்டார்கள். மக்களை பற்றி கவலைபடாத அரசு. வரி, வரி என போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளதுதான் தி.மு.க. அரசின் சாதனை. லஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது என்பதை மக்கள் உணர வேண்டும். தி.மு.க. ஆட்சி எப்போது அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலரும்.

இவ்வாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags:    

Similar News