குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
- குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
- ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு குறைந்ததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் பாறையை ஒட்டி மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்தது.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகை கால விடுமுறை மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமானது குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் தென்காசி நகரப்பகுதி குத்துக்கல்வலசை, மேலகரம், குற்றாலம், வல்லம், மத்தளம்பாறை, திரவியநகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.
இரவு 11 மணிக்கு மேல் மிகக் கனமழையாக கொட்டி தீர்த்ததால் முக்கிய அருவியான குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது
மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளமானது பாதுகாப்பு வளைவைத் தாண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் நிற்கும் பகுதி வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் இரவில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.இன்று காலையில் மழைப்பொழிவு சற்று குறைந்ததால் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியது.
தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக விழ தொடங்கியது. எனினும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு காலையில் மெயின் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.
ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஐந்தருவி மற்றும் புலியருவில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.