தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. உடன் த.மா.கா. கூட்டணி என ஜி.கே.வாசன் அறிவிப்பு

Published On 2024-02-26 10:17 IST   |   Update On 2024-02-26 11:28:00 IST
  • பாரதிய ஜனதா ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு நலம் பெறும்.
  • விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு பாரதிய ஜனதா முக்கியத்துவம் அளிக்கிறது.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து செயலாற்றுவதில் த.மா.கா. பெருமை கொள்கிறது.

பாரதிய ஜனதா ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு நலம் பெறும். பாதுகாப்பு ரீதியாக வலிமை அடையும். இதை கருத்தில் கொண்டே பா.ஜ.க. அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைகிறது.

பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் நானும் (ஜி.கே.வாசன்) பங்கேற்கிறேன். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.


வளமான பாரதம் அமைய வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் பாரதிய ஜனதாவுடன் வந்து இணைய வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பாடுபடுவார்கள்.

விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு பாரதிய ஜனதா முக்கியத்துவம் அளிக்கிறது. படித்தவர்கள், இளைஞர்கள், பெண்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். அவரது கரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

பாரதிய ஜனதாவுடன் விரைவில் த.மா.கா. தொகுதி பங்கீடு செய்யும்.

சாதாரண மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்க தி.மு.க. தவறி விட்டது. அதற்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் விடை கிடைக்கும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Tags:    

Similar News