தொடர் விடுமுறை - சென்னையில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
- கோயம்பேட்டில் இருந்து இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சென்னை:
குடியரசு தினம் 26-ந் தேதி (திங்கட்கிழமை) வருவதையொட்டி சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை உடன்தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இன்று (வெள்ளிக்கிழமை) கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 550 பஸ்களும் நாளை (சனிக்கிழமை) 450 பஸ்களும் கூடுதலாக இயக்கப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. இது தவிர பெங்களூரு திருப்பூர் ஈரோடு, கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 பஸ்கள் விடப்பட்டுள்ளன. மாதவரத்தில் இருந்து இன்றும் நாளையும் 24 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 26-ந் தேதி 800 சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.
கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.