பா.ஜ.க.வை எதிர்த்தால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் மிரட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- நாம் இங்கு குடும்பமாக இருப்பதை கேட்டால் பிரதமருக்கு கோபம் வந்துவிடும்.
- இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடே தி.மு.க.வின் கட்சிதான் தமிழ்நாடே கலைஞரின் குடும்பம்தான்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சகோதரர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி இல்லத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலையில் நடைபெற்றது.
மணமக்கள் சாரங்க ராஜன்-கீர்த்தனா ஆகியோரது திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
வழக்கமாக தொடர்ந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற காரணத்தால், பெரும்பாலும் குடும்பத்தாருடன் அதிக நேரம் எங்களை போன்றவர்கள் செலவிட முடியாது என்கிற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் இந்த திருமணத்தின் மூலமாக அந்த ஆதங்கம் குறைந்திருக்கும் என்று நான் கருதுகிறேன். இருந்தாலும், எல்லோரும் சொல்வது போன்று இது கழக குடும்பம்.
தி.மு.க.வை பேரறிஞர் அண்ணா துவக்கிய காலத்திலேயே தம்பி என்றுதான் எல்லோரையும் அழைத்து ஒரு குடும்ப பாச உணர்வோடு பேசுவார்.
அதேபோன்று கலைஞரும் அனைவரையும் உடன் பிறப்பே என்று அழைத்து ஒரு குடும்ப பாச உணர்வோடு நம்மை எல்லாம் உருவாக்கி இருக்கிறார்.
ஆகவே என்னை பொறுத்தவரை இதுவும் ஒரு கழக குடும்பம் என்ற வகையில் இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து நானும் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
எனது மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தியின் சிறப்புக்களை பெருமையாக இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். நான் ஒரு பட்டியலோடு வந்திருக்கிறேன்.
அவர் ஒரு பன்முக திறமையாளராக, பன்முகம் கொண்டவராக இருக்க கூடியவர். குழந்தைகள் நல மருத்துவராக இ.எஸ்.ஐ. மருத்துவமனை இயக்குனராக, தமிழ் பற்று கொண்டவராக, முற்போக்கு சிந்தனை கொண்டவராக, பட்டிமன்ற பேச்சாளராக பன்முகம் கொண்டவராக டாக்டராக மூர்த்தி திகழ்கிறார்.
ராஜமூர்த்தியை பொறுத்தவரை கம்பரை பற்றியும் பேசுவார். வள்ளலாரை பற்றியும் பேசுவார். அந்த அளவுக்கு ஆற்றல் பெற்றவர்.
இன்றைக்கு வள்ளலாரை பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். அப்படி அல்ல புலம்பிக் கொண்டிருக்கிறார். உளறிக்கொண்டு இருக்கிறார். அவர் யார் என்பது பற்றி நான் பேச விரும்பவில்லை. அது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அவருக்கெல்லாம் நேர்மாறாக வள்ளலாரை பற்றி ஆழ்ந்த பற்றுதலையும், புரிதலையும் கொண்டு பேசக்கூடியவர், அதைப்பற்றி கட்டுரையாக எழுதக் கூடியவர், அந்த அளவுக்கு ஆற்றல் கொண்டவராக விளங்கிக் கொண்டிருக்க கூடியவர் தான் டாக்டர் ராஜமூர்த்தி.
இவரது ஆற்றலை பற்றி தலைவர் கலைஞர் வள்ளல் நேசன் என்று ராஜமூர்த்திக்கு பாராட்டு பத்திரம் தந்திருக்கிறார்.
அப்படிப்பட்டவரின் மகன் திருமணத்தில் பங்கேற்று உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். இன்று நாடு போய்க் கொண்டிருக்கிற நிலை உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரையிலே ஒரு நல்லாட்சி தருவதற்கு நீங்கள் எந்த அளவிற்கு துணை நின்றீர்களோ, அந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக இன்றைக்கு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் வழங்கிய உறுதி மொழிகளை வாக்குறுதிகளை எந்த அளவுக்கு தொடர்ந்து நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். அதுபோல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சி தேவை.
காரணம் இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பி.ஜே.பி. ஆட்சி. அந்த பி.ஜே.பி. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முன்வரவில்லை. அதற்கு நேர்மாறாக மக்கள் விரோத போக்கோடு மதத்தை சனாதனத்தை இன்று மக்களிடத்தில் திணித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை இன்றைக்கு நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் கூட ஒரு சட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். பொது சிவில் சட்டம்.
இந்த பொது சிவில் சட்டம் என்பது நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என்று இருக்கிறது. அதை நீக்கி விட்டு பொது சிவில் சட்டமாக கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை, அந்த ஆட்சியை எதிர்க்க கூடியவர்களை எல்லாம் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்திலே மக்களுக்கு துன்பங்களை, கொடுமைகளை கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்கிற தீய சக்தியோடு இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஏற்கனவே அரசியல்வாதிகளில், அவர்களை எதிர்க்க கூடியவர்களை எல்லாம் சி.பி.ஐ., ஐ.டி., இ.டி. என்ற அந்த துறைகளை எல்லாம் வைத்து மிரட்டி கொண்டிருக்கிற ஒரு ஆட்சி இன்றைக்கு ஒரு ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
நாம் இங்கு குடும்பமாக இருப்பதை கேட்டால் பிரதமருக்கு கோபம் வந்துவிடும். ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் போய் பிரதமர் என்ன பேசி இருக்கிறார் என்றால், குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சியில் இருக்கிறார்கள். கட்சி நடத்துகிறார்கள் என்று விமர்சனம் செய்து பேசி இருக்கிறார்.
இதுபற்றி இதே மண்டபத்தில் நான் பேசும் போது கூறி இருக்கிறேன். இது குடும்ப கட்சிதான், அண்ணாவால் உருவாக்கப்பட்ட கலைஞரால் வளர்க்கப்பட்ட இந்த கட்சி குடும்ப கட்சிதான்.
இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடே தி.மு.க.வின் கட்சிதான் தமிழ்நாடே கலைஞரின் குடும்பம்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.