தமிழ்நாடு செய்திகள்

பதவியை பயன்படுத்தி சொத்து சேர்த்திருந்தால் பறிமுதல் செய்யட்டும்- அமைச்சர் பெரியசாமி

Published On 2026-01-14 14:29 IST   |   Update On 2026-01-14 14:29:00 IST
  • 100 நாள் வேலைத் திட்டமான ​மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது.
  • தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தின் விளைவாக குறைவான தொகை தற்போது பெறப்பட்டுள்ளது.

வத்தலகுண்டு:

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்காக, அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு 17-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக நான் ஏற்கனவே எனது விளக்கத்தை முழுமையாகக் கூறிவிட்டேன். இதுபோன்ற கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கே உள்ளது. அவர்தான் இதுகுறித்து இறுதி முடிவை அறிவிப்பார். 100 நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. மத்திய அரசு வழங்க வேண்டிய சுமார் 4,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தின் விளைவாக குறைவான தொகை தற்போது பெறப்பட்டுள்ளது. ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில் 'மகாத்மா காந்தி' என்ற பெயரை மத்திய அரசு நீக்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

ஆண்டு முழுவதும் விவசாய வேலைகள் இல்லாத சூழலில், ஏழை மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இத்திட்டத்தில் 240 நாட்கள் கூட வேலை வழங்கப்படுவதில்லை. கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.

அமைச்சர்கள் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்குகள் குறித்து கேள்விக்கு, நாங்கள் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். 15 முதல் 20 முறை சிறைச்சாலைக்குச் சென்று போராடிப் பக்குவப்பட்டுத்தான் ஒன்றியச் செயலாளர், எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் நிலைக்கு உயர்ந்துள்ளோம். பதவிக் காலத்தில் நாங்கள் சேர்த்ததாகச் சொல்லப்படும் சொத்துக்களை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும். இதுபோன்ற வழக்குகளால் எங்களது தேர்தல் பணி மற்றும் மக்கள் பணியில் எந்தச் சுணக்கமும் பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News