நிர்மலா சீதாராமன் பொய் செய்தியை பரப்பலாமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
- தி.மு.க.வுக்கு எத்தனையோ அணிகள் இருந்தாலும் ஒரு சிறந்த அணி இளைஞரணி தான் என்பது உங்களுக்கு தெரியும். அது யதார்த்த நிலை.
- விரைவில் சேலத்தில் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டிற்காக மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பர் திருமங்கலம் கோபால் இல்லத் திருமணம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
முதன் முதலில் தலைவர் கலைஞருக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே என்னிடம்தான் கோபால் அறிமுகம் ஆனார். 1970-71-ம் ஆண்டில் மதுரையில் இளைஞரணி துவக்கப்பட்ட நேரத்தில் அப்போது என்னுடன் இருந்து எனக்கு துணை நின்றவர் திருமங்கலம் கோபால்.
எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு பிரிந்தபோது திண்டுக்கல் இடைத்தேர்தலை சந்தித்தோம். திண்டுக்கல் தீர்ப்பு என்ற பிரசார நாடகத்தில் நான் நடித்தேன். அப்போது அந்த நாடகத்தை திருமங்கலத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதில் சில கலவரங்கள் ஏற்பட்டு விடுகிறது. அந்த பிரச்சனைக்குள் நான் போக விரும்பவில்லை. அரசியலாக்க விரும்பவில்லை.
அந்த கலவரம் ஏற்பட்ட நேரத்தில் எங்கிருந்து எப்படி வந்தார். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. கோபாலை அதற்கு முன்பு பார்த்தது கூட கிடையாது. அப்போது மேடைக்கு ஓடோடி வந்து என்னை பாதுகாத்து அழைத்து காரில் ஏற்றி நான் தங்கியிருந்த இடத்துக்கு பாதுகாப்பாக விட்டார். அப்போதுதான் எனக்கு அவர் அறிமுகம் ஆனார்.
அதற்கு பிறகு என்னோடு அவர் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி அவர் சென்னைக்கு வருவார். அவர் சென்னைக்கு வந்தால், தலைவர் வீட்டு வாசலிலேயே நிற்பார். உள்ளுக்குள் கூட வர மாட்டார். கோபாலபுரம் வீடு உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
வாசலில் உள்ள திண்ணையொட்டி ஜன்னல் அருகே சண்முகநாதன் 'டைப்' அடித்து கொண்டிருப்பார். அந்த ஜன்னல் திறந்திருக்கும். அதன் அருகே கோபால் நின்று கொண்டு என்னோடு, சண்முகநாதனோடுதான் பேசிக்கொண்டிருப்பார்.
இப்படி பேசி பேசி பழகி பழகி தலைவரிடம் சென்று அவரை அறிமுகப்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகு கலைஞரிடம் அறிமுகப்படுத்தினேன். உடனே தலைவர் கேட்டார்.
ஆளைப் பார்த்தால் வாட்டசாட்டமாக இருக்கிறார். நமக்கு ஒரு பாதுகாப்புக்கு இவரை வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார். உடனே தலைவர் காலில் கோபால் விழுந்தார்.
இது ஒன்றே எனக்கு போதும் என்றார் கோபால். உங்களுக்கு பாதுகாப்பாக உயிர் போகிற வரைக்கும் இருப்பேன் என்றார். அதே போல் கலைஞர் உயிர் பிரிகிற வரை கூட இருந்தவர் தான் திருமங்கலம் கோபால்.
நான் அதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். இப்போது அவரது 4-வது மகனுக்கும் நான் திருமணம் செய்து வைத்துள்ளேன்.
கட்சிக்காக உழைத்து கட்சிக்காக பாடுபட்டு தொண்டாற்றி, பல தியாகங்களை செய்து இப்போதும் கோபால் மிடுக்காகத்தான் உள்ளார்.
தி.மு.க.வுக்கு எத்தனையோ அணிகள் இருந்தாலும் ஒரு சிறந்த அணி இளைஞரணி தான் என்பது உங்களுக்கு தெரியும். அது யதார்த்த நிலை.
அந்த இளைஞரணி இன்று கம்பீரமாக தம்பி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெற்றி நடைபோடுவதும் உங்களுக்கு தெரியும்.
விரைவில் சேலத்தில் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டிற்காக மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறார். செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார். மாவட்ட கழக நிர்வாகிகளோடு கழக முன்னோடிகளோடு தொடர்ந்து ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார்.
மோட்டார்சைக்கிள் பேரணியை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி ஒரு எழுச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். எப்படி அன்றைக்கு இளைஞரணி தேவை, அதை ஊக்கப்படுத்த வேண்டும், பெருமைப்படுத்த வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும் என்று தலைவர் கலைஞர், பேராசிரியர் விரும்பினார்களோ அதை போல் நானும், பொதுச்செயலாளர் துரைமுருகனும், இளைஞரணி வளர வேண்டும் என்று விரும்பிக் கொண்டிருக்கிறோம்.
இப்படிப்பட்ட வளர்ச்சியை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், ஏதேதோ தவறான பிரசாரங்களை தேவையற்ற பிரசாரங்களை பொய் செய்திகளை அதை ஊடகங்களை பயன்படுத்தி, சமூக வலைதளங்களை பயன்படுத்தி இன்றைக்கு மக்களை குழப்பிக் கொண்டிருக்கும் அந்த செய்திகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
யார் வேண்டுமானாலும் குழப்பட்டும். அண்ணாமலை போன்றவர்கள் குழப்பினால் கூட கவலைப்பட மாட்டேன். ஆனால் ஒன்றியத்திலேயே பொறுப்பில் இருக்கக் கூடிய ஒரு அமைச்சர், நம்முடைய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி தருகிறார்.
அது என்னவென்றால் கோவில்களை நாம் கொள்ளையடித்து கொண்டிருக்கிறோம் என்கிறார். அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு மிக விளக்கமாக தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார். நான் அதற்கு மேற்கொண்டு விளக்கம் சொல்ல விரும்பவில்லை. நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இதுவரைக்கும் 5,500 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் இடங்கள், சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளது என்றால், அது தி.மு.க. ஆட்சியில்தான். திராவிட மால் ஆட்சிதான்.
உள்ளபடியே, அவர்களுக்கு பக்தி என்று ஒன்று இருந்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியை பாராட்ட வேண்டும். அந்த பக்தி இல்லை. பகல் வேஷம் அது. மக்களை ஏமாற்றுவதற்காக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. இந்த நிலையில்தான் இன்று நாடு போய்க் கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்ல ஒரு போலீஸ் அதிகாரி வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி போடுகிறார். அதற்கு நாம் வழக்கு போட்டுள்ளோம்.
இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். அந்த ஓட்டுக்கள் இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று நான் சொன்னதாக என் பெயரிலேயே வாட்ஸ்அப்பில் ஒரு போலீஸ் அதிகாரி ரிட்டயர்டு ஆபீசர் இதை போட்டுள்ளார்.
இப்படியெல்லாம் திட்டமிட்டு வளர்ந்து வரும் திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று சிலர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில், வரக்கூடிய தேர்தலை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.