தமிழ்நாடு

டாஸ்மாக் வருமானத்தை உயர்த்தியதுதான் அவர்களது சாதனை- அண்ணாமலை

Published On 2024-03-29 09:34 GMT   |   Update On 2024-03-29 09:34 GMT
  • சிப்காட் விவகாரம், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க.அரசு நடவடிக்கை எடுத்தது.
  • தி.மு.க.வின் சாதனை 33 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ.50ஆயிரம் கோடிக்கு உயர்த்தி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான த.மா.கா. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே அவர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பேசியதாவது:-

எனது தேர்தல் பிரசாரத்தை ஆன்மிக மகான் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்குகிறேன். மோடி ஆட்சியில் 40 லட்சம் கோடி தாய்மார்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பொருளாதாரத்தில் இந்தியா 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில் ஒரு நாடு உயர்ந்தால் தன் மக்கள் உயரமுடியும். அது மோடியால் மட்டும் தான் முடியும். இதுதான் பா.ஜனதா அரசின் சாதனை.

ஆனால் தி.மு.க. ஆட்சியில் அவர்களது பொருளாதாரம் மட்டுமே உயர்த்து உள்ளது. டிஆர்.பாலு மற்றும் அவரது குடும்ப சொத்து மதிப்பு 350 மடங்கு உயர்த்து உள்ளது.

சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவையே தி.மு.க. செய்த சாதனை. சிப்காட் விவகாரம், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க.அரசு நடவடிக்கை எடுத்தது.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்து விட்டார்.

இதே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர்களிடம் தி.மு.க. புகைப்படம் எடுத்து கொண்டது. இது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறது.சமூக நீதி என்பது தி.மு.க.வில் பேச்சளவில் தான் உள்ளது.

இந்தியாவில் வங்கி கடனை வாங்கிவிட்டு பலர் ஓடிவிட்டனர். மோடி ஆட்சிக்கு வந்த உடன் எல்லோரையும் சுளுக்கு எடுக்க ஆரம்பித்தோம். யார் எல்லாம் கடன் வாங்கினார்கள்? யார் எல்லாம் திருப்பி செலுத்தவில்லை? என கணக்கெடுத்து வரா கடனில் இருந்து ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த 10ஆண்டில் மத்திய பா.ஜ.க. அரசு மூலம் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியாக வந்து உள்ளது. ஆனால் தி.மு.க.வின் சாதனை 33 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ.50ஆயிரம் கோடிக்கு உயர்த்தி உள்ளது.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு 1 சதவீதம் கூட வாக்களிக்க உங்களுக்கு மனம் வராது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு ரூ.11ஆயிரத்து 930கோடி ஒதுக்கீடு செய்து இந்த பகுதி பொருளாதார வளர்ச்சிக்கு வழிசெய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News