தமிழ்நாடு

புலி வேட்டைக்கு போகிறோம்... எலி வேட்டை பற்றி பேசாதீர்கள்: செல்லூர் ராஜூ

Published On 2024-01-12 03:16 GMT   |   Update On 2024-01-12 03:16 GMT
  • வழக்குகளை பார்த்து, அ.தி.மு.க.வினர் பயப்படமாட்டார்கள்.
  • விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமிதான், மு.க.ஸ்டாலினுக்கு மாற்று.

மதுரை:

மதுரையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரை அரசு வக்கீல் பழனிசாமி, மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, செல்லூர் ராஜூ ஆஜராக வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, நேற்று அவர் கோர்ட்டு்க்கு வந்து நீதிபதி சிவகடாட்சம் முன்னிலையில், ஆஜராகி விளக்கம் அளித்தார். வழக்கு அடுத்த மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உண்மையைத்தான் கூறினேன். இல்லாததை பேசவில்லை. அரசின் நிலை குறித்துதான் பேசினேன். அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு 'சுஜூபி'. பொதுவாழ்க்கைக்கு வந்தால், மாலை வரும், மரியாதை வரும். ஜெயிலும் வரும். எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வழக்குகளை பார்த்து, அ.தி.மு.க.வினர் பயப்படமாட்டார்கள்.

விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமிதான், மு.க.ஸ்டாலினுக்கு மாற்று.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த தடைகோரிய வழக்கு குறித்து கேட்டபோது, "நாங்கள் புலிவேட்டைக்கு செல்கிறோம். எலி வேட்டையை பற்றி பேசாதீர்கள்" என கூறிச்சென்றார்.

இதனை தொடர்ந்து செல்லூர் ராஜூ உள்ளிட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள் ஊர்வலமாக வந்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி அங்கிருந்து சென்றனர்.

Tags:    

Similar News