தமிழ்நாடு

சனாதன பேச்சு : உதயநிதி பேசியது தவறு... ஆனால்

Published On 2024-03-06 09:34 GMT   |   Update On 2024-03-06 10:01 GMT
  • தமுஎகச ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
  • சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்" என அவர் கூறியிருந்தார்.

சனாதன பேச்சு தொடர்பான வழக்கில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு, ஆனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2-ம் தேதி தமுஎகச ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நீங்கள் `சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு' என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

உதாரணமாக கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம் ஆகும். எனவே இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்" என அவர் கூறியிருந்தார்.

திமுக எம்.பி ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அதில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு. ஆனால் எந்த விதமான உத்தரவும் இந்த வழக்கில் பிறப்பிக்க முடியாது என்று இந்த வழக்குகளை முடித்து வைத்தார். எதன் அடிப்படையில் அமைச்சர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என கேள்வி எழுப்ப முடியாது எனவும் நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்தார். 

Tags:    

Similar News