தமிழ்நாடு

ரூ.31 லட்சம் மோசடி: கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து விடுதியில் பணத்தை சுருட்டிய இளம்பெண்

Published On 2023-07-30 10:33 GMT   |   Update On 2023-07-30 10:33 GMT
  • ரசீது ஏதும் வழங்காமல் ஜி பே மூலம் சுகிர்தா கட்டணத்தை முழுமையாக தனது வங்கி கணக்கிற்கு செலுத்தி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சரவணம்பட்டி:

கோவை சரவணம்பட்டியில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த சுகிர்தா (35) என்பவர் வார்டனாக பணியாற்றி வந்தார். கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கால் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். சுகிர்தாவும் தனது சொந்த ஊருக்கு சென்றார்.

அதன்பின்னர் சில மாதங்கள் கழித்து சுகிர்தா விடுதிக்கு வந்து மீண்டும் பணியில் சேர்ந்து கொண்டார். அப்போது உரிமையாளர் அவரிடம் முந்தைய வரவு, செலவு கணக்குகளை கூறுமாறு தெரிவித்தார். அதற்கு அவர் எதுவும் கூறவில்லை.

பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே சுகிர்தா, தனது சித்தி இறந்துவிட்டதாகவும், ஊருக்கு சென்று வருவதாகவும் கூறி விட்டு சென்றார்.

தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஹாஸ்டல் உரிமையாளர் ஒரு விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்வதற்காக திறந்து பார்த்த போது பெரும்பாலான அறைகள் காலியாக இருந்துள்ளது. மேலும் ஊரடங்கு சமயத்தில் தங்கி இருந்த பெண்கள் விட்டுச் சென்ற உடைமைகள் அனைத்தும் காணாமல் போய் இருந்தது. சுகிர்தாவை, உரிமையாளர் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பை துண்டித்து வந்துள்ளார். சில நாட்கள் கழித்து சுகிர்தாவின் கள்ளக்காதலன் பிரபு என்பவர் விடுதி உரிமையாளருக்கு செல்போன் மூலம் அழைத்து விடுதியின் வரவு செலவு கணக்குகளை கேட்டால் ஆள் வைத்து கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

இதை தொடர்ந்து விடுதி உரிமையாளர் தங்கியிருந்த பெண்களின் விண்ணப்ப படிவங்களை எடுத்து பார்த்த போது அதில் இருந்த செல்போன் எண்கள் அனைத்தும் திருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விடுதி உரிமையாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில் உரிமையாளருக்கு தெரியாமல் ஏராளமான பெண்களை தங்க வைத்து கட்டணம் அதிகம் பெற்றுள்ளதும், பெற்ற தொகைக்கு ரசீது ஏதும் வழங்காமல் ஜி பே மூலம் சுகிர்தா கட்டணத்தை முழுமையாக தனது வங்கி கணக்கிற்கு செலுத்தி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ரூ.31 லட்சம் மோசடி செய்யப்பட்டிருந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிலிருந்து காட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தெரிய வந்தது.

தொடர்ந்து விடுதி உரிமையாளர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலர்களான பிரபு, ஜெயகுமார் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் ஜெயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் இருவரும் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் தூத்துக்குடிக்கு சென்று பதுங்கி இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சுகிர்தா குறித்த திருக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுகிர்தாவுக்கு ஏற்கனவே நெல்லையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுகிர்தா தனது கணவருடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்தார்.

அப்போது அவர்களது வீட்டின் அருகில் வசித்து வந்த பிரபுவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. தனது கணவர் வெளியில் செல்லும் நேரங்களில் சுகிர்தா, பிரபுவை அழைத்து தனிமையில் ஜாலியாக இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து நகை மற்றும் பணத்துடன் வெளியேறினர். அப்போது சுகிர்தா தனது 5 வயது மகனையும் அழைத்து சென்றார்.

இதை பார்த்த கள்ளக்காதலன் பிரபு மகனை எதற்கு அழைத்து வந்தாய் என கேட்கவே மகனின் சட்டை பாக்கெட்டில் கணவரின் பெயர் மற்றும் முகவரியை எழுதி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சுகிர்தா தலைமறைவானார்.

கள்ளக்காதலனுடன் வெளியேறிய சுகிர்தா பல இடங்களுக்கு ஜாலியாக சுற்றிவிட்டு மீண்டும் கோவை சரவணம்பட்டி பகுதிக்கு வந்து விடுதியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு ஜெயக்குமாருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுகிர்தா பணிபுரிந்த மகளிர் விடுதியில் ரூ.31 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு கள்ளக்காதலர்களுடன் தலைமறைவானதும் தெரியவந்தது. தற்போது போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News