தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் 7 தொகுதிகளை கேட்கும் தே.மு.தி.க.

Published On 2024-03-02 10:44 IST   |   Update On 2024-03-02 10:44:00 IST
  • 7 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
  • அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வசதியாக தே.மு.தி.க.வில் 5 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை அமைக்க அ.தி.மு.க. திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

இதையொட்டி பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அ.தி.மு.க. சார்பில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க. நேற்று அதிரடியாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், கே.பி.அன்பழகன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினார்கள்.

அப்போது கட்சியின் துணைச் செயலாளர்களான எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதுபற்றி தே.மு.தி.க. சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், அ.தி.மு.க.வுடன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

14 தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தரும் கட்சியுடன்தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று பிரேமலதா ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட நேற்றைய பேச்சுவார்த்தையின்போது அந்த கட்சி இறங்கி வந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் 7 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதில் அளித்த அ.தி.மு.க. குழுவினர் கூட்டணியில் எத்தனை தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்குவது? என்பது பற்றி பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வசதியாக தே.மு.தி.க.வில் 5 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதனை பிரேமலதா விரைவில் அறிவிக்க உள்ளார்.

இந்த குழுவில் தே.மு.தி.க. முன்னணி நிர்வாகிகள் இடம் பெற உள்ளனர். இந்த குழுவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்னும் சில நாட்களில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர்.

இதன் முடிவில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் மற்றும் போட்டியிடும் இடங்கள் ஆகியவை இறுதி செய்யப்பட உள்ளது.

தே.மு.தி.க. சார்பில் 7 பாராளுமன்ற தொகுதிகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க. தரப்பிலோ 4 பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் மேல்சபை எம்.பி. பதவி ஒன்றும் கண்டிப்பாக வேண்டும் என்றும் தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றியும் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற உள்ள பா.ம.க.வும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்பதால் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்பது பற்றி அ.தி.மு.க. தலைமை ஆலோசித்து முடிவெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை மேல்சபை எம்.பி. பதவியை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும் தே.மு.தி.க.வை சமாதானப்படுத்தி எப்படியும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற செய்துவிட வேண்டும் என்பதே அ.தி.மு.க. தலைவர்களின் விருப்பமாக உள்ளது.

அதற்கேற்ப அடுத்தடுத்து கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் அந்த கட்சி முடிவு செய்து உள்ளது.

Tags:    

Similar News