தமிழ்நாடு செய்திகள்

முதல்வர் என்னைப் பற்றி பேசுவதற்கு இது மட்டும்தான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி

Published On 2023-10-24 19:29 IST   |   Update On 2023-10-24 19:29:00 IST
  • குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, பொய்யர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார்.
  • எங்களை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்து வருகிறார்.

சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "என்னை பற்றி பல்வேறு விமர்சனம் செய்துள்ளார்கள். அதில் ஒருசிலவற்றை குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கூட்டத்தின் நோக்கம், அந்த கட்சி சம்பந்தப்பட்டது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், அந்த கூட்டத்தில் என்னைப் பற்றி அதிக நேரம் பேசியுள்ளார்."

"குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, பொய்யர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார். நான் இதுவரை ஊடகத்திலோ, பத்திரிகையிலோ பொய் செய்தி வெளியிட்டதில்லை. எனது அறிக்கையிலோ அல்லது ஊடகத்தில் பேட்டி அளிக்கும் போதோ, பொய்யான செய்தியை நான் எப்போதும் கொடுத்ததில்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு, திரு ஸ்டாலின் அவர்கள் என்னை பற்றி தவறான விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது."

"இதோடு, இரண்டறை ஆண்டு திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக் கொண்டு தி.மு.க. ஆட்சியில் மக்கள் கொதித்துப்போய், வெறுத்துப் போய் இருக்கின்றார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பயத்தில் என்னைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார் என்றுதான் நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்லாமல், நாங்கள் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணியில் இருந்து விலகிவிட்ட பிறகு, எங்களை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்து வருகிறார்."

"ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பது, விலகுவது அந்த கட்சியை பொருத்தது. எங்களை பொருத்தவரை நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். விலகிவிட்ட காரணத்தினால் தி.மு.க. தலைவர் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு மற்றும் அறிக்கையில் இருந்து இதனை புரிந்து கொள்ள முடிகிறது."

"தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சிறுபான்மையினருக்கு நன்மை செய்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தி வந்தார்கள். நாங்கள் கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வை சேர்ந்த என்னையும், தலைமை கழக நிர்வாகிகளை சந்திப்பதை அவரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் தான் இதுபோன்ற வெறுப்பு பேச்சு வந்து கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்."

"அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு முடிக்கும் தருவாயில் இருந்த போது தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு முதல்வர் ஆன மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, முடிக்கப்பட்ட திட்டங்களைத் தான் திறந்து வைத்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியின் போது ஒரே ஆண்டில் மட்டும் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன."

"இந்த மருத்துவ கல்லூரிகளின் பணிகள் 70 சதவீதம் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு, மீதமுள்ள பணிகளை முடித்துவைத்து, அந்த கட்டிடங்களை தான் அவர் திறந்து வைத்துள்ளார். இதே போன்று, பல்வேறு பாலங்களுக்கான பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. அவற்றையும் திரு. ஸ்டாலின் தான் திறந்து வைத்தார்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News