தமிழ்நாடு

தி.மு.க. எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் கேட்டு மனு: இளம்பெண் 2-ந்தேதி ஆஜராக உத்தரவு

Published On 2024-01-31 10:35 GMT   |   Update On 2024-01-31 10:35 GMT
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.
  • ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை:

சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், 'புகார்தாரரை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை. அவரை குடும்பத்தில் ஒருவராக கருதி அவருக்கு தனி படுக்கை அறை ஒதுக்கி உரிய பாதுகாப்பு வழங்கினோம். மேல்படிப்புக்கும் ஏற்பாடு செய்தோம். நாங்கள் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. நாங்கள் அப்பாவி. எனவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் இளம்பெண் 2-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சம்மனுடன் போலீசார் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News