செய்திகள்
மழை வெள்ளம்

வீராணம் ஏரி பகுதியில் வெள்ளம் வடிகிறது

Published On 2020-12-09 06:28 GMT   |   Update On 2020-12-09 06:28 GMT
வீராணம் ஏரியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து இருந்த மழை வெள்ளம் தற்போது வடிய தொடங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்து உள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இதனால் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள 300 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தவித்தனர்.

தற்போது வடவலாற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

வெள்ளிங்கால் ஓடையில் இருந்து 296 கன அடி நீரும்,செங்கால் ஓடையில் இருந்து 355 கன அடி நீரும் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக உள்ளது.

ஏரியின் பாதுகாப்பு கருதி 627 கன அடிநீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் லேசாக மழை தூறி வருகிறது. மழையின் அளவு குறைந்து உள்ளதால் வீராணம் ஏரியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து இருந்த மழை வெள்ளம் தற்போது வடிய தொடங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News