செய்திகள்

இலவச அரிசி திட்டத்தை தடுத்து நிறுத்தியவர் ரங்கசாமி- நாராயணசாமி கடும் தாக்கு

Published On 2019-04-10 11:05 GMT   |   Update On 2019-04-10 11:05 GMT
இலவச அரிசி திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி வினியோகம் செய்ய விடாமல் ரங்கசாமி தடுத்ததாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #Narayanasamy
புதுச்சேரி:

புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தொகுதி, தொகுதியாக, வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று உப்பளம் தொகுதியில் வீதி, வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சின்னமணிக்கூண்டு அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரசாரத்தின் போது பேசியதாவது:-

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. ரங்கசாமியை ஜெயலலிதா துரோகி என விமர்சித்தபோதும் அ.தி.மு.க.வினருடன் கூட்டணி வைத்துள்ளார்.

மோடியும், பேடியும் சேர்ந்து புதுவையில் எந்த திட்டத்தையும் செயல்படுத்த விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு மூலகாரணமாக இருப்பவர் ரங்கசாமி. இதை கண்டித்துத்தான் நாங்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்துக்கு பிறகு தான் அரிசி வந்தது. அதையும் தேர்தலை காரணம் காட்டி வினியோகம் செய்ய விடாமல் ரங்கசாமி தடுத்துள்ளார்.

தமிழகத்திலும், ஆந்திராவிலும் தேர்தல் நடைமுறையில் இருக்கும் போது இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. துறைமுகத்திற்காக ரூ.64 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம். உப்பளத்தில் 900 வீடுகள் கட்ட திட்டமிட்டு உள்ளோம்.

மீனவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும். இதற்கு கை சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது அமைச்சர் கந்தசாமி, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், முருகன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். #Loksabhaelections2019 #Narayanasamy
Tags:    

Similar News