தமிழ்நாடு செய்திகள்

பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பு

Published On 2026-01-13 09:12 IST   |   Update On 2026-01-13 09:12:00 IST
  • பாலமேட்டில் வருகிற 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
  • அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

அலங்காநல்லூர்:

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு, அலங்காநல்லூரில் உலகப்புகழ் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பாலமேட்டில் வருகிற 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இதற்காக பாலமேட்டில் உள்ள மஞ்ச மலை சுவாமி ஆற்று திடலில் தயார் நிலையில் வாடிவாசல், பார்வையாளர் மாடம் மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இதே போல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி கோட்டைமுனி சாமி திடல், வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இரும்பு தடுப்பு மேடை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அமரும் இடம் மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது. பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்கள். இதை முன்னிட்டு போலீசாரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News