2026 தை மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
- மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை.
- பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும்.
சிம்ம ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 6-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன், புதன் ஆகிய கிரகங்கள் இருப்பதால் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். வீடு, இடம் வாங்குவதன் மூலமாகவோ, மணவிழா, மணிவிழா போன்றவை நடத்துவதன் மூலமாகவோ, சுப விரயங்களை மேற்கொண்டால் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும். சனியின் பார்வை இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெற்றிருக்கும் இந்த நேரம், பிள்ளைகளால் பிரச்சனைகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். காரியத்திலும் தாமதம் ஏற்படும். உறவினர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியலாம். பிள்ளைகளாலும் பிரச்சனைகள் வந்து அலைமோதும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் வந்து மனக்கிலேசத்தை உருவாக்கும். வியாபாரத்தில் நண்பர்களால் இழப்புகள் ஏற்படலாம். குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. பஞ்சம ஸ்தானம் குரு வீடு. குரு வீட்டை குருவே பார்ப்பது யோகம்தான். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் பயனாக கிடைக்க வேண்டிய பலன்கள் இப்பொழுது கிடைக்கும். இருந்தாலும் மனக்கசப்பு தரும் தகவல்களும் வந்துசேரும். நண்பர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில காரியங்கள் தாமதமாக வந்தாலும் முடிவில் நல்லவிதமாக முடிவடையும். இக்காலத்தில் சுபச்செலவுகள் செய்வதன் மூலம் தேவையற்ற விரயங்களை தவிர்க்க இயலும். பஞ்சாயத்துக்களில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். 'வியாபாரத்தில் பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளைச் சேர்க்கலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, `வாழ்க்கைத் துணைக்கு வேலை இல்லையே' என்ற கவலை அகலும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டினால் நல்லபடி அமையும். பொதுவாக நினைத்தது நிறைவேறும் நேரம் இது. மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு திருப்தி தரும். அவர்களது இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். முக்கியப் புள்ளிகளின் வரிசையில் உங்கள் பெயர் இடம்பெறும் வண்ணம் நல்ல காரியமொன்றை செய்து முடிப்பீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். அவர்கள் மூலமாக ஒருசில நல்ல காரியங்கள் நடைபெறும். 'பழைய தொழிலை பைசல் செய்துவிட்டு புதிய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று, வேறு இடத்திற்கு மாறும் எண்ணத்தை உறுதிப்படுத்திக்கொள்வர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். கலைஞர்களுக்கு பெருமை சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 26, 27, 30, 31, பிப்ரவரி: 5, 6, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கன்னி ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தனாதிபதி சுக்ரனோடு இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நிறைவு ஏற்படும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பர். 10-ல் குரு இருப்பதால் புதிய பொறுப்புகள் வந்துசேரும். உத்தியோகத்தில் பதவி மாற்றம் ஏற்படலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண்பழியில் இருந்து விடுபடுவர். அவர்கள் விரும்பியபடியே பதவி வாய்ப்பு கிடைக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற குரு, வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது இனிய பலன்கள் ஏராளம் நடைபெறும். குறிப்பாக இடம், பூமி வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும். 'வரன்கள் வந்து வந்து திரும்புகின்றதே.. எதுவும் முடிவாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இனி வரும் வாய்ப்புகள் நல்லதாக அமையும். குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. அந்த மூன்று இடங்களுக்குரிய பலன்கள் உங்களை வந்தடையும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல் - வாங்கலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாடகைக் கட்டிடத்தில் இருந்தவர்கள் சொந்தக் கட்டிடத்திற்கு மாற எடுத்த முயற்சி கைகூடும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அளிப்பர். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அகல, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இருப்பினும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பழைய பிரச்சனைக்குப் புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம்' என்பார்கள். அதன்படி 6-ல் சஞ்சரிக்கும் புதனால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக ஊதிய உயர்வுடன் நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொடர் கடனால் அவதிப்பட்டவர்களுக்கு, கொடுக்கல்- வாங்கலை ஒழுங்கு செய்துகொள்ள வழிபிறக்கும். பெற்றோரின் ஆதரவோடு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றம் உறுதியாகும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவரது பெயர்ச்சி மூலம் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பழுதாகி செலவு வைக்கும் பழைய வாகனத்தால் அவதிப்பட்டவர்களுக்கு, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும் விதம் அமையும். போட்டிக்கு மத்தியில் வியாபாரம் வெற்றிநடைபோடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பத்தை உருவாக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பாதியில் லாபம் வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படும். மாணவ - மாணவிகள் கல்வியில் வெற்றி பெற, கடினமாக முயற்சிக்க வேண்டியதிருக்கும். உறவினர் பகை உருவாகும் என்பதால், பெண்கள் கவனமாக செயல்படுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 25, 29, பிப்ரவரி: 1, 2, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
துலாம் ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் புதனுடன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை வழங்குகிறார். மேலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகமாவார். அவர் வக்ரம் பெற்றிருப்பது யோகம்தான். எனவே உங்கள் ராசி புனிதமடைகிறது. சென்ற மாதத்தில் தாமதப்பட்ட காரியங்கள் இப்பொழுது தடையின்றி நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னேற்றம் இப்பொழுது வந்துசேரும். ஆரோக்கியத் தொல்லை அகன்று உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகிறது. குரு, உங்கள் ராசியின் சகோதர ஸ்தானத்திற்கு அதிபதி. மேலும் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களுக்கும் அதிபதி. எனவே இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். ஜீவனத்திற்கு கவலை இல்லாத சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள், குணமடைவர். குருவின் பார்வை பலத்தால் உடன்பிறப்புகளின் திருமணம் அல்லது அவர்களின் வாரிசு திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும். இதுவரை பாகப்பிரிவினைக்கு ஒத்து வராத உடன்பிறப்புகள் இப்பொழுது மனம் மாறி ஒத்துழைப்பு தருவர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்பொழுது மாற்றப்படுவர். 'இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அதற்கு பண உதவி கிடைக்குமா?' என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தொழில் நடத்துபவர்கள் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்வர்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். 'ஐந்தும் ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பார்கள். எனவே மிதமிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். துணிந்து சில முடிவுகளை எடுத்து, மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். எந்த ஒரு வேலையையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் உங்கள் திறமைகளைப் பார்த்து மேலதிகாரிகள் வியப்பர். பதவி உயர்வு தானாக தேடிவரும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிநாதன் மற்றும் அஷ்டமாதிபதியான சுக்ரன் 7.2.2026 அன்று பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் விரயம் ஏற்படும். எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி தடைப்பட்டு வந்திருக்கலாம். அது இப்போது கைகூடும். இடமாறுதல் இனிமை தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரும் மாற்றம் நல்ல மாற்றமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் ஒப்பந்தங்கள் வந்துகொண்டே இருக்கும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சி கைகூடலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 19, 28, 29, பிப்ரவரி: 3, 4, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
விருச்சிக ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு லாபாதிபதி புதனும், தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருக்கின்றனர். இதனால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல கிரக நிலைகள் சாதகமாக விளங்குகின்றன. தொழில் வெற்றிநடை போடும். இதயம் மகிழும் செய்தி வந்துகொண்டே இருக்கும். தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். எல்லா வழிகளிலும் ஏற்றமும், நல்ல மாற்றமும் கிடைக்கும் நேரம் இது.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால், அந்த இடங்களெல்லாம் புனிதமடைந்து அற்புதமான பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - பஞ்சமாதிபதியானவர் குரு. 'அவர் வக்ரம் பெற்றிருக்கிறாரே' என்று நினைக்க வேண்டாம். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். மதிப்பு, மரியாதை உயரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். இல்லத்தில் இனிய நிகழ்வுகள் நடைபெற வழிபிறக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நலம் காண்பீர்கள். சமுதாயப் பணிகளில் ஈடுபடுவோருக்கு விருதுகளும், பாராட்டுக்களும் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், புதிய பதவிகளும் கிடைக்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கும் 8, 11-க்கும் அதிபதியான புதன் 29.1.2026 அன்று அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும். 'புதிய வாகனம் வாங்க வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு, அந்த வாய்ப்பு அமையும். நவீனமான வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள். 'வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து ஊதிய உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். வீடு கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் முயற்சியும் கைகூடும். பிள்ளைகளின் கல்யாணத்தை சிறப்பாகச் செய்து முடிக்கும் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும் வாய்ப்பும் உண்டு. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 19, 22, 23, பிப்ரவரி: 1, 2, 6, 7, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.