செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு? - குமரி அனந்தன் ருசிகர பதில்

Published On 2019-03-26 05:00 GMT   |   Update On 2019-03-26 05:00 GMT
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் ருசிகரமாக பதில் அளித்தார். #KumariAnandan #ThoothukudiConstituency
சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடக்க உள்ளது. அனைத்துக்கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக 2 பெண் வேட்பாளர்கள், அதிலும் பிரபலமான பெண் தலைவர்கள் மோதும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.



காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளும், தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழியும் எதிர் எதிர் முகாமில் இருந்து களம் காண்கின்றனர். தூத்துக்குடி தொகுதி மக்கள் யாருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க போகிறார்கள் என்பது மே 23-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாகும் நேரத்தில் தான் தெரியவரும் என்றாலும், இப்போதே அவர்கள் இருவரையும் ஆதரித்து, இரு கட்சிகளின் சார்பிலும் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

இதற்கிடையே சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனிடம், ‘தூத்துக்குடி தொகுதியில் உங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்தும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் உங்கள் மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்த்தும் பிரசாரம் செய்வீர்களா? என்றும், கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறீர்களா? என்று நிருபர்கள் எடக்குமடக்காக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இருப்பினும் யார்? யார்? வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு’ என்று பிடிகொடுக்காமல் பதில் அளித்தார். #KumariAnandan #ThoothukudiConstituency
Tags:    

Similar News